கோலாலம்பூர், ஜனவரி.29-
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென ஓடி வந்த பூனைக்குட்டி ஒன்றைப் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்ட வீடியோ தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
பரபரப்பு மிகுந்த சாலை போக்குவரத்து சமிக்ஞையில் வாகனங்கள் காத்துக் கொண்டிருந்த போது, ஒரு சிறிய பூனைக்குட்டி சாலையின் குறுக்கே ஓடியது. இதைக் கண்ட அந்த மோட்டார் சைக்கிளோட்டி , சற்றும் யோசிக்காமல் பாய்ந்து சென்று, அந்த பூனைக்குட்டியைப் பத்திரமாக மீட்டார். பின்னால் வந்த வாகனங்களால் ஆபத்து ஏற்படும் சூழலிலும் அவர் காட்டிய துணிச்சல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் காட்சியை Chan Zi Yee என்பவர் வீடியோவாகப் பகிர்ந்து, RAK 3713 என்ற எண் கொண்ட அந்த மோட்டார் சைக்கிள் வீரருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். "நல்ல உள்ளம் கொண்டவர்கள் அமைதியான வாழ்வைப் பெறட்டும்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த மோட்டார் சைக்கிளோட்டி Isyraf Imran Mohd Fauzi என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது கமெண்டில், "அனைவருக்கும் நன்றி, நான் என்னால் முடிந்ததைச் செய்தேன், ஆனால் இறைவன் அந்த பூனையை அதிகம் நேசிக்கிறான்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இதுவரை 34,400-க்கும் மேற்பட்ட Likes-க்களையும், ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது. "ஒரு சிறிய பூனையாக இருந்தாலும், அதன் உயிரைக் காப்பாற்றத் தன் உயிரையே பணயம் வைத்த அவரது மனிதாபிமானத்திற்குத் தலை வணங்குகிறோம்" என நெட்டிசன்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
இந்தச் சிறிய செயல், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது.








