கோலாலம்பூர், ஜனவரி.29-
13 ஆண்டுகளுக்கு முன்பு, போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ஈரான் சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு மலேசியப் பெண்கள், தாங்கள் அளவுக்கு அதிகமான தண்டனைகளை அனுபவித்து விட்டதாகக் கூறி மலேசிய உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு, போதைப் பொருள் வைத்திருந்ததற்காக Tehran-னில் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவருக்கும், அந்நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டுகள் தண்டனை விதித்தது.
அப்பெண்களின் ஜப்பான் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளைச் செய்த ‘மாதவன்’ என்ற முகவர், பை ஒன்றைக் கொடுத்ததாகவும், அதில் போதைப் பொருட்கள் இருந்தது அப்பெண்களுக்குத் தெரியாது என்றும் அவர்களின் வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
Tehran-இல் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட போது, அவர்களில் ஒரு பெண்ணுக்கு 14 வயது என்றும், அவரது உறவினருக்கு 47 வயது என்றும் மனோகரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு, சர்வதேச கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், 102 ஈரானிய கைதிகளுக்குப் பதிலாக மலேசியாவிற்கு அனுப்பப்பட்ட அவ்விரு பெண்களும், கடந்த 12 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
சர்வதேச கைதிகள் பரிமாற்றச் சட்டத்தின் பிரிவு 18(A)-வின் படி, அத்தகைய கைதிகளுக்கு பிணை, பொது மன்னிப்பு, தண்டனைக் குறைப்பு அல்லது தண்டனை மாற்றம் உள்ளிட்டவைகள் மறுக்கப்படக்கூடாது என்றும் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது 26 வயதாகும் அந்த இளம் பெண்ணின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் இருவருக்கும் பிணை வழங்க வேண்டும் என்றும் மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.








