புத்ராஜெயா, ஜனவரி.29-
இந்தியாவில் அதிகரித்து வரும் நிபா வைரஸ் தொற்று காரணமாக, மலேசியாவில் சுகாதாரக் கண்காணிப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவின் அனைத்துலக குடிநுழைவு வாயில்களில் செயல்பட்டு வரும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ், நிபா வைரஸ் தொற்றுக்குக் காரணமான அதிக ஆபத்துள்ள விலங்குகள் தொடர்பான பொருட்களை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், மலேசியாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவுவதைத் தடுப்பதற்கும், பல்வேறு துறைகள் மற்றும் முகமைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் நிபா நோயின் எந்தவொரு பாதிப்பும் பதிவாகவில்லை என்ற போதிலும், மற்ற பல நாடுகளில் அவ்வப்போது பதிவாகும் நோய்த் தொற்றுகளைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பரவல் ஏற்படும் அபாயத்திற்கு எதிராக சுகாதார அமைச்சு தொடர்ந்து விழிப்புடன் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








