கோலாலம்பூர், ஜனவரி.29-
செந்துலில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த தம்பதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
46 மற்றும் 39 வயதுடைய சீன பிரஜைகளான அவர்கள் இருவரிடமிருந்து, 34.90 கிராம் ketamine வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் சுகார்னோ முஹமட் ஸஹாரி தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வீட்டின் அறை ஒன்றில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான பொருட்களும், அதன் ஆய்வகமும் இருப்பதையும் போலீஸ் கண்டறிந்துள்ளது.
அந்த ஆய்வகத்தில் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அஹ்மாட் சுகார்னோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவ்வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 64 ஆயிரத்து 496 ரிங்கிட் ஆகும்.
மேலும், அந்த ஆடவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசியாவிற்குள் நுழைந்திருப்பதும், அவரையடுத்து அவரது மனைவி என நம்பப்படும் அப்பெண் ஒரு வாரத்திற்கு முன்பு மலேசியா வந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.








