கோலாலம்பூர், ஜனவரி.29-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தேகத்திற்குரிய முதலீட்டுத் திட்டங்களை விளம்பரப்படுத்தும் காணொளிகள் முதல், பாடகி டத்தோ ஶ்ரீ சித்தி நூர்ஹாலிஸா தாருடின் நன்கொடைகளைக் கோரும் காணொளிகள் வரை, மலேசியாவில் தற்போது deepfake எனப்படும் போலியான காணொளிகள் இணையத்தில் உலா வருகின்றன.
மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிமின் புகைப்படங்கள் கூட இந்த deepfake காணொளிகளில் இருந்து தப்பவில்லை.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் கோரிக்கையின் பேரில், இணையவெளியில் இருந்து சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் deepfake, மோசடி உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன.
அதே வேளையில், கடந்த 2023 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், இணையவழி மற்றும் நிதி மோசடிகள் மூலம் சுமார் 5.62 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் கடந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 2.77 பில்லியன் ரிங்கிட் இழப்பு பதிவாகியுள்ளது.
உள்துறை அமைச்சின் தகவலின் படி, இந்தத் தொகையானது தொலைபேசி, காதல் மோசடிகள், இணையவழி வர்த்தகக் குற்றங்கள், இணைய நிதி மோசடிகள் உள்ளிட்டவையாகும்.
இந்நிலையில், எதிர்வரும் செயற்கை நுண்ணறிவு ஆளுகைச் சட்டம், செயற்கை நுண்ணறிவு உற்பத்தியில் பாதுகாப்பு அம்சங்களைக் கையாளும் ஓர் ஒருங்கிணைந்த தேசியக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிறுவப்பட்ட நெறிமுறைக் கோட்பாடுகளிலிருந்து, தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கங்கள் உருவாவதைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இச்சட்டத்தில் இருப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.








