கோலாலம்பூர், ஜனவரி.29-
மலேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் முஹமட் ரஸாலி அலியாஸ் மீது, 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், அதாவது மலேசிய மதிப்பில் 78 ஆயிரத்து 680 மலேசிய ரிங்கிட் மற்றும் 64 ஆயிரத்து 600 மலேசிய ரிங்கிட் சம்பந்தப்பட்ட மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டன.
நீதிமதி சுஸானா ஹுசேன் முன்னிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது, அதனை மறுத்த ரஸாலி மேல் விசாரணை கோரினார்.
முதல் குற்றச்சாட்டின்படி, Sheikh Ahmad Nafiq Sheikh A Rahman என்பவரிடமிருந்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ரஸாலி லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
பாதுகாப்பு இணைய அமைப்பில் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுத் தரும் நோக்கில், ரஸாலிக்கு , இந்த லஞ்சத் தொகையானது கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டுகளின்படி, Intelligence PC Centre Sdn Bhd நிறுவனத்தின் இயக்குநரான தனது மனைவி டத்தின் அஸாரினா பாக்கியாவின் சார்பில், 26 ஆயிரத்து 800 ரிங்கிட் மற்றும் 37 ஆயிரத்து 800 ரிங்கிட்டை பயண டிக்கெட் செலவுகளுக்காக, லஞ்சமாகப் பெற்றதாக, ரஸாலிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கூறுகின்றன.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக் கட்டத்தில், ரஸாலி இவ்விரு குற்றங்களையும் புரிந்ததாக நம்பப்படுகின்றது.
இவ்விரு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.








