கோலாலம்பூர், ஜனவரி.29-
வரும் ஞாயிற்றுக்கிழமை பத்துமலை திருத்தலத்தில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவையை முன்னிட்டு இன்று ஜனவரி 29 ஆம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை ஏழு முக்கிய சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, MRR2 சாலையிலிருந்து பத்துமலையை நோக்கிச் செல்லும் ஜாலான் கம்போங் மெலாயு சமிக்ஞை விளக்குப்பகுதி, கோயிலை நோக்கிச் செல்லும் Jalan Perusahaan, SBC எனும் Jalan Seri Batu Caves 8, Jalan Batu Caves Lama, Shell எண்ணெய் நிலையம் முன்புறம் உள்ள SBC சாலையின் சமிக்ஞை விளக்கு முஞ்சந்தி, மற்றும் கோயிலின் பிரதான நுழைவாயிலை நோக்கி செல்லும் புறவழிச்சாலை ஆகியவையே மூடப்படவிருக்கும் 7 சாலைகளாகும் என்று டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு இன்று கோம்பாக்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டத்தோ ஷாஸெலி கஹார் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
பத்துமலைக்குச் செல்லும் முக்கிய சந்திப்புகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்பதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப் பாதைகளான DUKE, NKVE, Jalan Kucing மற்றும் Jalan Gombak ஆகிய சாலைகளைப் பயன்படுத்துமாறு டத்தோ ஷாஸெலி கஹார் அறிவுறுத்தினார்.
மேலும் பத்துமலைக்கு வரும் பக்தர்கள், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது சிறந்தது. குறிப்பாக, கேடிஎம் கொமுட்டர் மற்றும் கூடுதல் பேருந்து சேவைகளை அரசாங்கம் அறிவித்துள்ளதால், வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க பக்தர்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனி வாகனங்களில் வருவோர், கோம்பாக் மாவட்ட போலீஸ் துறையின் பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது இறுதி நேர நிலவரத்தில் அறிவிக்கப்படும் மாற்றுப் பாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்த தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.








