கோலாலம்பூர், ஜனவரி.29-
மலேசியாவில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் வெளிநாட்டினர் மானிய விலையிலான பாக்கெட் சமையல் எண்ணெயை வாங்கத் தடை விதிக்கப்படும் என உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவினத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அர்மிஸான் முஹமட் அலி அறிவித்துள்ளார்.
1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இதற்கான புதிய விதிமுறைகள் வாக்கப்பட்டு, eCOSS எனும் டிஜிட்டல் கண்காணிப்பு முறை மூலம் இந்தத் தடை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.
இந்த eCOSS செயலி மூலம் விநியோகச் சங்கிலி முழுவதும் கண்காணிக்கப்பட்டு, கடத்தல் மற்றும் முறைகேடுகள் தடுக்கப்படும். கடந்த 2025 மே மாதம் முதல் புத்ராஜெயா மற்றும் ஜோகூர் போன்ற பகுதிகளில் இந்த முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
முதியவர்கள் மற்றும் இணைய வசதி இல்லாத குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காகச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தங்களின் மைகாட் அடையாள அட்டையைப் பயன்படுத்தி எண்ணெய் வாங்கும் வகையில் இத்திட்டம் மைகாசே தளத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள மலேசியர்களுக்கு மட்டுமே மானியத்தின் பலன் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று டத்தோ ஶ்ரீ அர்மிஸான் தெளிவுபடுத்தினார்.








