சுபாங் ஜெயா, ஆகஸ்ட்.17-
சுபாங் ஜெயா, யுஎஸ்ஜேவில் உள்ள வீட்டில் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவம், கொலை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது. செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் துறை வல்லுநர்கள் நடத்திய பிரேதப் பரிசோதனையில், அம்மாணவியின் கழுத்து எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவரது மரணம் நிகழ்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடக்கத்தில் தற்கொலை எனச் சந்தேகிக்கப்பட்டநிலையில், இப்போது கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், மாணவி கை விரல்களால் கழுத்து நெறிக்கப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர், இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் யாரும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.








