கோத்தா பாரு, ஆகஸ்ட்.09-
மாணவி ஸாரா கைரினா மரணம் தொடர்பில் வெளிப்படையிலான விசாரணை தேவை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் அந்த மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையில் யாரையும் அரசாங்கம் தற்காக்காது என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
13 வயது ஸாரா கைரினா மரணம் தொடர்பாக விவகாரத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதையும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
காரணம், அந்த மாணவி கீழே விழுந்து இருக்கிறார் என்றும், கீழே தள்ளப்பட்டார் என்றும், பகடி வதைக்கு ஆளாகியுள்ளார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
எங்களின் நிலைப்பாடு தெளிவான ஒன்றாகும். இதன் பின்னணியில் யாருடைய பிள்ளையாக இருந்தாலும் சரி, ஒரு அமைச்சரின் பிள்ளையாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்று டத்தோ ஶ்ரீ அன்வார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சபாவைச் சேர்ந்த நமது பிள்ளை உயிரிழந்துள்ளார். அவரின் மரணத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனை ஓர் அரசியல் பொருளாகப் பயன்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இன்று சனிக்கிழமை கிளந்தான் குபாங் கெரியான், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் சுகாதாரக் கல்வி வளாகத்தில் கிளந்தான் மடானி திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.








