கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 473 சிறைவாசிகளுக்கு கட்டுமானத் துறையில் டிவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி முறை வழங்கப்படுவதாக துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கேள்வி-பதில் அங்கத்தில் உரையாற்றிய அவர், கடந்த 2024-ஆம் ஆண்டு 184 பேரும், 2025-ஆம் ஆண்டு 234 பேரும், இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் மேலும் 55 பேரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறைவாசிகள் விடுதலையான பின்னர் வேலைவாய்ப்பு பெற்று சமூகத்தில் மீண்டும் சிறப்பாக இணைவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தப் பயிற்சிக்கு திறன் மேம்பாட்டுத் துறை வழங்கும் மலேசியத் திறன் சான்றிதழ், கட்டுமானத் துறை மேம்பாட்டு வாரியம் வழங்கும் திறன் சான்றிதழ் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து வழங்கப்படும் மாடுலர் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
கட்டுமானத் துறைக்கான பயிற்சியில் வெல்டிங், மின்சாரப் பணிகள், மொபைல் கிரேன் இயக்கம், பிளாஸ்டரிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்திறன்கள் கற்பிக்கப்படுவதாகவும் ஷம்சுல் அனுவார் தெரிவித்துள்ளார்.








