மலாக்கா, செப்டம்பர்.24-
மலாக்காவில் உள்ள மலேசிய மணிபால் மருத்துவப் பல்கலைக்கழக கல்லூரியின் துணை வேந்தர், மாணவர் நலன் பிரிவு தலைவர் மற்றும் மாணவர் நல்லுரையாளர் ஆகிய மூவர் இன்று மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
கடந்த ஜுன் மாதம் அந்த பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு எதிராக பொய்யானத் தகவலைப் பகிர்ந்ததாக அதன் துணை வேந்தரான 63 வயது ஜி. ஜெயகுமார், மாணவர் நலன் பிரிவுத் தலைவர் 40 வயது கே. தாட்சாயிணி மற்றும் மாணவர் நல்லுரையாளரான 26 வயது ஜே. லாவண்யா ஆகிய மூவர் நீதிபதி ரொஹாதுல் அக்மார் அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
23 வயது மாணவருக்கு எதிராக பொய்யானத் தகவலைப் பதிவேற்றம் செய்த தாட்சாயிணியின் செயலுக்கு ஜெயகுமாரும், லாவண்யாவும் உடந்தையாக இருந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மலேசிய மணிபால் மருத்துவக் கல்லூரியின் மாணவர் நிர்வகிப்புக்குரிய அதிகாரத்துவ மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்தி அந்த மூவரும் இந்த விஷமச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








