ஈப்போ, ஜூலை.20-
டெலிகிராம் செயலி வாயிலாக தன்னை மருத்துவர் என்று கூறிக் கொண்ட நபரிடம், 15 வயது இளம் பெண் ஒருவர் தனது நிர்வாணப் படங்களை அனுப்பி வைத்தது தொடர்பாக அந்தப் பெண் கொடுத்துள்ள இரண்டு புகார்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக பேரா, மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டச் சந்தேகப் பேர்வழி, தன்னை மருத்துவர் என்று கூறிக் கொண்டு, ஆள்மாறாட்டம் செய்து, அந்தப் பெண்ணின் நிர்வாணக் கோலப் புகைப்படங்களைப் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பெண்ணை உடல் சுகாதாரச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறிக் கொண்டு அந்தப் புகைப்படங்களைச் சந்தேகப் பேர்வழி பெற்றுள்ளார்.
மார்பகப் புற்று நோய் உட்பட உடலில் உள்ள நோய்கள் துல்லியமாகக் கண்டறிப்படும் என்றும் அதற்கு நேரடியாக மருத்துவச் சோதனைக்கு வர வேண்டியதில்லை என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.
ஆடையின்றி, நிர்வாணமானக் கோலத்தில் புகைப்படங்களை அனுப்பி வைத்தால் மட்டுமே போதுமானதாகும் என்று மருத்துவர் என்று கூறிக் கொண்ட அந்த நபர் தெரிவித்த பொய்யான தகவலையும் நம்பி, அந்த இளம் பெண் தனது நிர்வாணக் கோலப் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளதாக ஹஸ்புல்லா குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வரும் அதே வேளையில் தங்கள் பிள்ளைகள் இது போன்ற பாலியல் குற்றச்செயல்கள் வலையில் சிக்கி விடாமல் இருக்க பெற்றோர்கள் அணுக்கமாகக் கண்காணித்து வர வேண்டும் என்று ஹஸ்புல்லா கேட்டுக் கொண்டார்.








