Sep 26, 2026
Thisaigal NewsYouTube
தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய நாம்வீ மனுத் தாக்கல்
தற்போதைய செய்திகள்

தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய நாம்வீ மனுத் தாக்கல்

Share:

சர்ச்சைக்குரிய ராப் பாடகர் நேமிவீ தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்ததாக சுமத்தப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி, ஜாலான் கான்லே பகுதியில் உள்ள தங்கும்விடுதியின் அறையில், 1.57 கிராம் மெத்தம்பேட்டமைன் வைத்திருந்ததாக, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றமானது, ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 12(2) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 1 லட்சம் ரிங்கிட் வரையில் அபராதம், அல்லது 5 ஆண்டுகள் சிறை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், அதே இடத்தில், அவர், 0.78 கிராம் சில்டெனாபில் என்ற தடை செய்யப்பட்ட பொருளை வைத்திருந்ததாகவும் இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இக்குற்றமானது, நச்சுப் பொருட்கள் சட்டம் 1952, பிரிவு 9(1) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம், அல்லது 5 ஆண்டுகள் சிறை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள நேமிவீ தாம் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி, போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனி வழக்கில், பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்ததையடுத்து, நீதிமன்றம் அவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Related News