தம்பின், டிசம்பர்.26-
இம்மாதத் தொடக்கத்தில், 53 வயதான சூரி நருடின் கொலை செய்யப்பட்டு, பையில் அடைக்கப்பட்ட வழக்கில், 51 வயது ஆடவர் மீது தம்பின் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ரெட்ஸா அஸார் ரெஸாலி முன்னிலையில் இன்று வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை ஸைனிஸான் ஸைனால் என்ற அந்த ஆடவர் ஒப்புக் கொண்டார்.
என்றாலும், கொலை வழக்கானது, உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், இவ்வழக்கில் குற்ற ஒப்புதல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த டிசம்பர் 7 முதல் 18-ஆம் தேதிக்கு இடையில், நெகிரி செம்பிலான், ஜாலான் பெசார் - லிங்கி அருகிலுள்ள வீட்டின் பின்புறம், சூரி நருடினைக் கொலை செய்தாக அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இக்கொலைக் குற்றமானது நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனையோ அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம்.
தடயவியல் அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதால், இவ்வழக்கானது வரும் ஜனவரி 27-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.








