கோலாலம்பூர், பிப்ரவரி.03-
கோலாலம்பூர் மேயர் பதவிக்கான சாத்தியமான தேர்தல்கள் குறித்த ஓர் ஆய்வை முன்வைத்து, தேவையற்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம் என போக்குவரத்துறை அமைச்சரும், ஜசெக கட்சியின் பொதுச் செயலாளருமான அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அது வெறும் ஆய்வு மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள அவர், மேயர் தேர்தல் குறித்த நன்மை, தீமைகள் குறித்து விவாதிக்க அந்த ஆய்வு வழிவகை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
பல வளர்ந்த மற்றும் ஜனநாயக நாடுகளிலும் மேயர் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ள லோக், இந்த பரிந்துரையை ஜசெக மட்டுமின்றி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இதனை முன்மொழிந்ததைச் சுட்டிக் காட்டினார்.
முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீனும் சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் இந்த யோசனையை முன்மொழிந்திருந்தார்.
அண்மையில், கோலாலம்பூர் மாநகர் மன்ற ஊராட்சி தேர்தல் எனப்படும் மேயர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தனது அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.








