இம்மாத தொடக்கத்தில் பண்டார் சுன்சூரியாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தோனேசியப் பெண்ணைக் கொலை செய்ததாக 44 வயதுடைய பெண் ஒருவர் இன்று சிப்பாங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
44 வயதான சின் சாவ் லான் என்ற அப்பெண் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
சுயதொழில் செய்து வரும் சின் சாவ் லான், புத்ரி என அடையாளம் காணப்பட்ட இந்தோனேசியப் பெண்ணை, கடந்த ஜூன் 3 ஆம் தேதி பிற்பகல் 2.31 மணியளவில், பண்டார் சுன்சூரியாவில் உள்ள தி ஆலிவ் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீடு ஒன்றில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலைக் குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், சின் சாவ் லான்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
நீதிபதி கைராத்துல் அனிமா ஜெலானி இவ்வழக்கை வரும் ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.








