யுனிவர்சிட்டி மலாயா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்விசாரணையின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மாணவர் அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கடந்த ஓராண்டிற்க்கும் மேலாக மாணவர்களும் பொதுமக்களும் பதிலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நியூஜென் யுஎம் என்ற அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர், மீண்டும் கல்வி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருவதாக வெளியான தகவல்கள் கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளானது முதன்முதலாக கடந்த 2024-ஆம் ஆண்டு, டிசம்பரில் வெளிச்சத்துக்கு வந்தன.
மாணவர்களிடம் பேராசிரியர் ஒருவர் தனது ஆபாசப் புகைப்படங்களை பகிர்ந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து கடந்த ஆண்டு செப்டம்பரில், பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், உள்விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விசாரணைக் குழு தனது அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.
எனினும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவும் வெளியிடப்படாததால், சம்பவத்தின் உண்மை நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாணவர்களும் பொதுமக்களும் தெளிவான விளக்கத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.








