பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.19-
டாமான்சாரா டாமாயில் கைவிடப்பட்ட கால்நடை மருத்துவமனை ஒன்றில், இரண்டு வளர்ப்புப் பிராணிகள் பராமரிப்பு இன்றி உயிரிழந்தது தொடர்பாக, டிவிஎஸ் எனப்படும் சிலாங்கூர் கால்நடை சேவைகள் துறை விசாரணை நடத்தி வருகின்றது.
பராமரிப்பின்றி கைவிடப்பட்ட அந்த இரண்டு வளர்ப்புப் பிராணிகளும், அதன் கூண்டுகளில் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்த காணொளி, சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக புகார்களைப் பெற்ற, சிலாங்கூர் டிவிஎஸ், உடனடியாக விலங்குகள் நல அதிகாரிகள் குழுவை அனுப்பி, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அந்த இரு வளர்ப்புப் பிராணிகளும், ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக, விலங்குகள் நலச்சட்டம் 2015, பிரிவு 29(1)(e)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள அதிகாரிகள், அந்த கால்நடை மருத்துவமனை உரிமையாளரை விசாரணை செய்து வருகின்றனர்.








