Oct 27, 2026
Thisaigal NewsYouTube

பன்முகத்தன்மையில் ஒற்றுமை: தீபாவளிக் கொண்டாட்டத்தில் ங்கா கோர் மிங் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பன்முகத்தன்மையில் ஒற்றுமை: தீபாவளிக் கொண்டாட்டத்தில் ங்கா கோர் மிங் வலியுறுத்தல்

வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, புத்ராஜெயாவில் உள்ள தனது கிரிஸ்டல் மண்டபத்தில் இன்று ‘தீப ஒளி 2026’ தீபாவளிக் கொண்டாட்டத்தை அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் தலைமையில் சிறப்பாக நடத்தியது.

அமைச்சு அளவில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சிறப்பு வருகை புரிந்தார்.

வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தீயணைப்பு, மீட்புப்படை இலாகா, தேசிய வீடமைப்பு இலாகா, ஊராட்சித்துறை இலாகா உள்ளிட்ட எட்டு இலாகாக்கள் மற்றும் ஏஜென்சிகளின் பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் தீபாவளி விருந்து உபசரிப்பில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்குத் தலைமையேற்ற அமைச்சர் ங்கா கோர் மிங், துணை அமைச்சர் ஹாஜா அய்மான் அதிரா சாபு, அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ வீரா டாக்டர் எம் நோர் அஸ்மான் ஆகியோர் மேளதாள இசையும் மயிலாட்டமும் முழங்க, பாரம்பரியக் கலைநயத்துடன் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுடன் இணைந்து, அமைச்சர் ங்கா கோர் மிங் குத்துவிளக்கேற்றி ‘தீப ஒளி’ விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். மங்கல விளக்கின் ஒளியில் அரங்கம் விழாக்கோலம் பூண்டது.

விழாவுக்கு மேலும் மெருகூட்டும் வகையில், இந்தியர்களின் பாரம்பரியக் கலைகளான மேளதாள இசை, சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறின. தாளலயத்துடன் ஒலித்த மேள இசையும், வீரத்தையும் கலைத்திறனையும் வெளிப்படுத்திய சிலம்பாட்டமும் அமைச்சுப் பணியாளர்களையும் வருகையாளர்களையும் பரவசத்தில் ஆழ்த்தின.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரையாற்றிய அமைச்சர் ங்கா கோர் மிங், அமைச்சின் வரலாற்றிலேயே இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டம் மிகப் பிரமாண்டமாக நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.

பன்முகத்தன்மை ஒற்றுமைக்குத் தடையல்ல; மாறாக, அது நாட்டை ஒன்றிணைக்கும் வலிமை என்று வலியுறுத்திய அவர், பல்வேறு இனங்களின் பண்டிகைகளை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது பரஸ்பர மரியாதையையும் புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் என்றார்.

இந்தியச் சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு மித்ரா மூலம் 4,000 குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி உதவியும், 1,300 சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை உதவியும் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ங்கா கோர் மிங், நாடு முழுவதும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் 200 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுடன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி வீரையா மற்றும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் பல்வேறு இலாகாக்களின் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →