2026 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு, தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வரும் நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் மிக பெரிய அளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் 10,000க்கும் மேற்பட்டவர் வருகை புரிவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த திறந்த இல்ல தீபாவளி பொது பொது உபசரிப்பில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து, சிறப்பு வருகை புரிவார். காலை முதல் இரவு வரை கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிறுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக யுனேஸ்வரன் கூறினார். உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் ‘ருமா மலேசியா’ கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. விழாவின் கருப்பொருள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர் டோர்செட் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான தேநீர் விருந்துச் சந்திப்பில் யுனேஸ்வரன் இவ்விவரத்தைத் தெரிவித்தார்.
தீபாவளி பொது உபசரிப்புக்கு அப்பாற்பட்ட நிலையில் தாம் துணை அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் ஆண்டில் ஊடகங்கள் வழங்கிய ஆதரவுக்கும் விரிவான செய்தி வெளியீடுகளுக்கும் யுனேஸ்வரன் நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஊடகங்கள் தொடர்ந்து மேற்கொண்ட உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவதுடன், இந்தியச் சமூகத்துக்குள்ளும் ஒற்றுமையை வளர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக யுனேஸ்வரன் வலியுறுத்தினார். சமூகப் பிரச்சினைகளைப் பிளவுபடுத்தும் கோணத்தில் அணுகாமல், அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் செய்திகளை வெளியிடுவதும், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அவசியம் என்றார்.








