கோலாலம்பூர், ஜூலை.14-
அரசு மருத்துவமனைகளின் சவக் கிடங்குகளில் நடக்கும் லஞ்ச ஊழலைச் சுகாதார அமைச்சு கடுமையாகக் கருதுவதாக அறிவித்துள்ளது.
பிணங்களைக் குறி வைத்து பேரம் பேசுதல், லஞ்சம் வாங்குதல், ஊழல் புரிதல் முதலியவற்றைக்கு எதிராக சவக் கிடங்குப் பணியாளர்கள் மீது சுகாதார அமைச்சு கடும் நடவடிக்கையை எடுக்கவிருக்கிறது என்று அது எச்சரித்துள்ளது.
பிணங்களை அவற்றின் சொந்தக்காரர்களுக்கு உடனடியாக ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், அவை குறித்து பிணப் பெட்டிக்காரர்களுக்குத் தகவல் தெரிவித்தல் என சவக் கிடங்குகளில் லஞ்சப் போர்வையில் பேரம் பேசும் ஒரு தொழிலாக மாறிக் கொண்டு இருக்கும் இத்தகையச் சம்பவங்கள் இனி அனுமதிக்கப்படாது என்று அது குறிப்பிட்டுள்ளது.
தங்கள் உறவினர்களை இழந்து ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் குடும்பத்தாரின் பெரும் துயருக்கு மத்தியில் அவர்களிடம் எந்தவொரு பேரம் பேசாமல், இடையூறு விளைவிக்காமல், கால தாமதம் காட்டப்படாமல் நடைமுறைகளை அனுசரித்து, பிரேதங்களை உடனடியாக ஒப்படைப்பதே சவக் கிடங்குப் பணியாளர்களின் தலையாகக் கடமையாக இருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
நடைமுறைச் சிக்கல்கள் இல்லாத பிரேதங்களைச் சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் ஒப்படைப்பதில் எந்தவோர் இடையூறுமின்றி, சுமூகமாக நடைபெறுவதை அனைத்து அரசு மருத்துவமனைகளும் உறுதிச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
சவக் கிடங்குகளிலிருந்து பிணங்களைக் கோருவதற்குச் சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் பிணப் பெட்டிக்காரர்கள் ஒரு விலையை நிர்ணயித்து பேரம் பேசி வருவதாகக் கிடைக்கப் பெற்றப் பரவலான புகார்களைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு இந்த எச்சரிக்கைச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது போன்ற புகார்கள் கடந்த ஆண்டில் பெறப்பட்டதில் காஜாங் மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளில் உள்ள சவக் கிடங்குகளில் பணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இதே போன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிரம்பான் மருத்துவமனையின் சவக் கிடங்கில் ஐந்து சுகாதாரப் பணியாளர்கள் தொடர்புடைய 21 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் அம்பலமாகின.
ஒவ்வொரு பிணத்திற்கும் 600 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட் வரை லஞ்சம் கேட்டு பேரம் பேசிப் பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.








