ஜோகூர் பாரு, பிப்ரவரி.12-
ஜோகூரில் Tuberculosis எனப்படும் காச நோய் தொற்றுக்கு உள்ளான 3 மாணவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர்.
மீதமுள்ள நான்கு பேருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக ஜோகூர் மாநில கல்வி மற்றும் தகவல், தொடர்புக் குழுத் தலைவர் அஸ்னான் தாமின் தெரிவித்துள்ளார்.
அந்த 7 மாணவர்களில், கோத்தா திங்கி தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களும், பொந்தியான் பள்ளியைச் சேர்ந்த 1 மாணவரும் அடங்குவதாக அஸ்னான் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது அங்கு நிலைமை சீரடைந்து வருவதாகவும், குணமடைந்த மாணவர்கள் பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கண்காணிப்பிற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அஸ்னான் தாமின் தெரிவித்துள்ளார்.
கோத்தா திங்கி, பெங்கெராங் பகுதியில், காச நோய் தொற்று ஏற்பட்டிருப்பதையும், 33 பேருக்கு காச நோய் பரவியிருப்பதையும், கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் உறுதிப்படுத்தியதையடுத்து, அங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








