தொலைபேசி ஸ்கேம் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 7 ஜப்பானியர்கள், கோலாலம்பூரில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் உள்ள ஜப்பானிய தூதரகத்திலிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து அந்த 7 ஜப்பானியர்களும் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ரம்லி முஹமாட் யூசோஃப் தெரிவித்தார.
சம்பந்தப்பட்ட மோசடிக் கும்பல், ஜப்பானியர்களை இலக்காக கொண்டு ஸ்கைப் செயலியை பயன்படுத்தி இந்த தொலைபேசி ஸ்கேம் மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களை வங்கி அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இக்கும்பல், சம்பந்தப்பட்டவர்க்ளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் வங்கி கணக்கு பிரச்னையில் இருப்பதாக கூறி, இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளன.
இவர்கள் பிடிபட்டது மூலம் 11 கைப்பேசிகள், ஒரு கணினி மொடெம், பல்வேறு மின்சார சாதனப்பொருட்களை கொண்ட ஒரு கறுப்பு நெகிழிப்பை, சாவிகள், சுத்தியியல் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.







