பட்டர்வொர்த், டிசம்பர்.10-
பட்டர்வொர்த், தாமான் ரத்னா, லோரோங் நக்கோடா 5 இல் உள்ள ஒரு வீட்டில் இன்று காலையில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு மாதுவும், அவரின் வளர்ப்பு மகளும் கருகி மாண்டனர்.
காலை 9.41 மணியளவில் இரட்டை வீடொன்றில் நிகழ்ந்த இந்தத் தீச் சம்பவத்தில் வீடு 85 விழுக்காடு அழிந்தது.
இதில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் தீக்காயங்களுடன் சமையல் அறையிலிருந்து தீயணைப்பு, மீட்புப் படையால் மீட்கப்பட்டார். இவ்விபத்தில் 50 வயது ஹயானி யாக்கோப் Hayani என்ற மாதுவும், அவரின் வளர்ப்பு மகளான 4 முதல் 5 வயது மதிக்கத்தக்க Andra என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட சிறுமியும் உயிரிழந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பை, மீட்புப் படை இலாகா இயக்குநர் முகமட் ஹம்ஸா தெரிவித்தார்.
வீட்டின் நாலாபுறமும் சூழ்ந்த தீ, கொழுந்து விட்டு எரிந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டார் பெர்டா மற்றும் கப்பாளா பாத்தாஸ் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், காலை 10.06 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
காயமுற்ற 20 வயது ஆடவர் EMRS வண்டியின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக முகமட் ஹம்ஸா தெரிவித்தார்.








