Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஜாஹிட்டிற்கு எதிரான மேல்முறையீட்டை ஏன் மீட்டுக்கொண்டீர்கள்? எஸ்பிஆர்எம்.முன்னாள் தலைமை ஆணையர் லத்திபா கோயா கேள்வி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜாஹிட்டிற்கு எதிரான மேல்முறையீட்டை ஏன் மீட்டுக்கொண்டீர்கள்? எஸ்பிஆர்எம்.முன்னாள் தலைமை ஆணையர் லத்திபா கோயா கேள்வி

கோலாலம்பூர், டிச. 14-


வெளிநாட்டு விசா முறை ஒப்பந்தம் தொடர்பான 40 ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கும் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான மேல்முறையீட்டை பிராசிகியூஷன் தரப்பு மீட்டுக்கொண்டு இருப்பது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமயான எஸ்.பி.ஆர்.எம்.முன்னாள் தலைமை ஆணையர் லத்திபா கோயா கேள்வி எழுப்பியுள்ளார்.

SPRM தலைமை ஆணையராக தாம் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக 40 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளையும் தாம் அணுக்கமாக ஆராய்ந்து, ஒவ்வொரு குற்றச்சாட்டின் தன்மையையும் மதிப்பீடு செய்ததாக லத்திபா கோயா விளக்கினார்.

இந்த 40 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளும் பாரிசான் நேஷனல் அரசாங்கத்தில் அகமட் ஜாஹிட், உள்துறை அமைச்சராக இருந்த போது, தமது பதவியை பயன்படுத்தி, இந்த லஞ்ச ஊழல் கைங்கரியத்தை அவர் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையராக இருந்த போது தாம் நேரடியாக விசாரணை நடத்திய வழக்குகள் குறித்து கருத்துரைக்க விரும்பவில்லை. ஆனால், ஜாஹிட் சம்பந்தப்பட்ட வழக்கு நாட்டின் நலனை உள்ளடக்கிய மிகுந்த கவன ஈர்ப்புக்குரிய வழக்காகும் என்று லத்திபா கோயா விவரித்தார்.

தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இதர உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசியப்பின்னர் ஜாஹிட்டை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று சட்டத்துறை தலைவருக்கு தாம் பரிந்துரை செய்ததாக லத்திபா கோயா விளக்கினார்.

ஜாஹிட்டிற்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டும் கண்மூடித்தனமாக கொண்டு வரப்படவில்லை. என் தலைமையில் ஒரு குழுவினரே இந்த லஞ்ச ஊழல் வழக்கை மிக கவனமாக ஆராந்ததுடன், ஜாஹிட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கு ஏதுவாக உரிய ஆலோசனைகளை வழங்குவதில் நான் தவறியது இல்லை. ஜாஹிட்டிற்கு எதிராக அடிப்படை முகாந்திரங்கள் அனைத்தும் திரட்டப்பட்ட பின்னரே இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஜாஹிட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஆனால், ஜாஹிட்டை விடுவித்து இருக்கும் உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ஆனால், தற்போது, சட்டத்துறை அலுலகத்தின் வாதத்தின்படி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் மிக கவனமாக ஆராய்ந்ததில் ஜாஹிட்டிற்கு எதிரான மேல்முறையீட்டை மீட்டுக்கொள்வதற்கு வலுவான சட்ட ஆதாரங்களும், அடிப்படை உண்மைகளும் உள்ளன என்று கூறி, அந்த 40 குற்றச்சாட்டுகள் தொடர்பான மேல்முறையீட்டை மீட்டுக்கொண்டு இருப்பதாக அது வாதிடுவது மிக ஆச்சரியமாக உள்ளது என்று லத்திபா கோயா விளக்கினார்.

இது எப்படி சாத்தியமானது என்பதே தமது கேள்வியாகும் என்று பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் எஸ்பிஆர்எம். தலைமை ஆணையராக பொறுப்பேற்றிருந்த லத்திபா வினவினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →