ஷா ஆலாம், ஜனவரி.19-
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தனது இரண்டு மாதப் பெண் குழந்தையைத் தரைத் தளத்தில் வீசி அதன் இறப்பிற்குக் காரணமாக இருந்த முகமட் டேனியல் இமான் முகமட் ஷெரீப் என்பவருக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
2022 ஆம் ஆண்டு ஜூலையில் ரவாங், பண்டார் தாசிக் புத்திரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நடந்ததாக அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான மோதலால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது ஆத்திரத்தைக் குழந்தையிடம் காட்டியுள்ளார்.
குழந்தையின் உதட்டில் ரத்தம் வருவதையும், மூச்சு விட சிரமப்படுவதையும் பார்த்த தாய் பதறியுள்ளார். அப்போது குழந்தை தவறி விழுந்து மேசையில் மோதியதாகத் தந்தை பொய் கூறியுள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டானதால் குழந்தை உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.








