கோலாலம்பூர், செப்டம்பர்.02-
மடானி அரசாங்கம் வழங்கியுள்ள தலா 100 ரிங்கிட் சாரா உதவித் திட்டத்தை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 68 ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மக்களின் பொருளாதாரச் சிரமங்களைக் குறைப்பதற்கு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய இந்தச் சலுகைத் திட்டம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி அமலில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
எனவே 100 ரிங்கிட் மதிப்பில் பொருட்களை வாங்கிக் கொள்ள பேரங்காடி காசாளர் முகப்பிடங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அளவிற்கு அரக்க பறக்க அவசரம் காட்டத் தேவையில்லை என்று தியோ ஆலோசனை கூறினார்.
பேரங்காடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமானால் பொதுமக்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குரிய மளிகைக் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சாரா திட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள இன்னும் 4 மாத கால அவகாசம் இருக்கிறது என்று கோலாலம்பூரில் இன்று மைகாசே திட்டத்தில் பங்கேற்க மளிகைக் கடை ஒன்றில் களம் இறங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தியோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.








