கோல பிலா, அக்டோபர்.31-
நெகிரி செம்பிலான், கோல பிலா, ஜாலான் செலாருவில் இருந்து தம்பினை நோக்கிச் சென்ற கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென்று தீப்பிடித்துக் கொண்டதில் காரின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் நிகழ்ந்தது. இதில் 32 வயது சியே வீ காங் என்ற நபர் உயிர் தப்பினார். தாம் சீனக் கோவிலுக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தமது டொயோட்டா லெக்சஸ் காரில் திடீரென்று குளிர்சாதனம், செயல்படாமல் உஷ்ணக் காற்று வெளியேறிக் கொண்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். சாலையோரத்தில் காரை நிறுத்திய பின்னர், இயந்திரத்தை மீண்டும் முடுக்கி விட முற்பட்ட வேளையில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து புகைவரத் தொடங்கிய அடுத்த வினாடியே கார் தீப்பிடித்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதிர்ஷ்டவசமாக மின்னல் வேகத்தில் காரின் கதவைத் திறந்து கொண்டு தாம் வெளியேறி விட்டதாக அந்த கார் ஓட்டுநர் தெரிவித்தார்.








