நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 27 தரவுத் தளத் திட்டங்கள் மூலம் 4,053 வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் உயர் திறன் பணிகளில் ஏறத்தாழ 90 விழுக்காட்டை மலேசியர்கள் நிரப்புவார்கள் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த வேலைகளில் 3,523 உயர் திறன் பணிகளாகும். மின் மற்றும் இயந்திரப் பொறியியல், இணையக் கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு, தரவுத் தளங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய துறைகளில் இவை அமையும்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்திற்குப் பதிலளித்து நாடாளுமன்றத்தில் பேசிய கோபிந்த், இத்திட்டங்களில் குறைந்தது 30 விழுக்காடு உள்ளூர் நிறுவனங்களின் பங்களிப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றார்.
அதேவேளையில், தரவுத் தளங்களின் வளர்ச்சி நாட்டின் எரிசக்தி மற்றும் நீர்வளத் தேவைகளைப் பாதிக்காத வகையில் நிலைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.








