மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதற்காக சக இஸ்லாமியர்களை ‘நயவஞ்சகர்’ என்றும், இஸ்லாத்தை விட்டு விலகியவர்கள் என்றும் எளிதில் முத்திரை குத்தும் போக்கை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளார். இத்தகைய அணுகுமுறை, மதம் வலியுறுத்தும் நற்பண்புகளுக்கும் தனிமனித ஒழுக்கத்துக்கும் முரணானது என்று அவர் கூறினார்.
இன்று புத்ராஜெயாவில் உள்ள காம்ப்ளக்ஸ் ஶ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டத்தோ ஸ்ரீ அன்வார், மதத்தைப் பற்றிச் சிறிதளவு கற்றுக் கொண்டவுடன் மற்றவர்களைத் தீர்ப்பிடுவதும், அவர்களை மதநம்பிக்கையற்றவர்கள் எனக் குற்றஞ்சாட்டுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
இப்போக்கைச் சமாளிக்க, இஸ்லாமிய அறிவையும் விழிப்புணர்வையும் புரிதலையும் முழுமையாக வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கும்போதும் இஸ்லாமியப் புரிதலை வலுப்படுத்துவது கருத்தில் கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட டத்தோ ஸ்ரீ அன்வார், பாரம்பரிய இஸ்லாமியக் கல்வி நிலையங்களை மீண்டும் வலுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த முயற்சிகள் விவாதிக்கப்படும்போது தம்மையும் வரவு செலவுத் திட்டத்தையும் ‘நயவஞ்சகம்’ எனச் சிலர் விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.








