செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையக தடுப்புக் காவலில் விசாரணை கைதி நூரிஸ்வான் ஸுல்கிஃப்லி உயிரிழந்த சம்பவத்தை, கொலைக் குற்றத்தைக் கையாளும் குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் விசாரிப்பதற்கு, குற்றவியல் அறிக்கை ஒன்று திறக்கப்பட வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராயர், கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ், இந்த வழக்கின் விசாரணை நிலவரம் குறித்தும், விசாரணை அறிக்கை சட்டத்துறைத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவரின் நிலைப்பாடு என்ன, எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
அதேவேளையில் நூரிஸ்வான் ஸுல்கிஃப்லி மரணம் தொடர்பில் விசாரணை முடியும் வரையில் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் போலீஸ்காரர்களையும், விசாரணை அதிகாரிகளையும் விசாரணை முடியும் வரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ராயர் வலியுறுத்தினார்.
மேலும் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு முன்பே வழக்கு 331ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நூரிஸ்வான் ஸுல்கிஃப்லி குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை சட்டத்துறை தலைவரும், போலீஸ் அதிகாரிகளும், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகமும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தினார்.








