கோலாலம்பூர், ஜனவரி.22-
மலேசியாவின் பவளப் பாறைகளின் ஆரோக்கியம் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 47ஆயிரத்து 250 கால்பந்து மைதானங்களுக்குச் சமமான பவளப் பாரம்பரியப் பரப்பை நாடு இழந்துள்ளதாகவும் 'ரீஃப் செக் மலேசியா' (Reef Check Malaysia) அமைப்பின் 2025-ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கை எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் 297 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் அது முக்கியத் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.
2024 இல் 44.65 சதவீதமாக இருந்த உயிருள்ள பவளப் பாறைகளின் சராசரி அளவு, 2025-இல் 39.94 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஒரே ஆண்டில் ஏற்பட்ட 10 சதவீத வீழ்ச்சியாகும்.
2022-ஆம் ஆண்டில் பவளப் பாறைகளின் அளவு 50 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மலேசியா தனது 20 சதவீத பவளப் பாறைகளை இழந்துள்ளது.
கடல் நீர் வெப்பமடைவதால் ஏற்படும் பவளப் பாறை வெளுத்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மிதமிஞ்சிய அழுத்தம் ஆகியவை இந்த அழிவிற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ரீஃப் செக் மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி Julian Hyde கூறுகையில், "நாம் இழந்த பவளப் பாறைகளின் அளவு சுமார் 47,250 கால்பந்து மைதானங்களுக்குச் சமம்" என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பவளப் பாறைகள் அழிவது கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன் வளத்தைப் பாதிக்கும் என்பதால் இது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.








