நேற்றிரவு குவா மூசாங் பகுதியில் ஜாலான் குவா முசாங்-ஜெலியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது புலி மீது மோதியதாக நம்பப்பட்ட ஆடவருக்கு முகம், கால்களில் காயம் ஏற்பட்டது.
தோட்ட உரிமையாளரான 26 வயது முஹமாட் சுல்ஹில்மி மொக்தார் கூறுகையில், இரவு 9.30 மணியளவில் திடீரென சாலையின் வலது பக்கத்தில் உள்ள புதருக்குள் இருந்து வெளியே வந்த புலி ஒன்று தாம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தில் மோதியது எனக் குறிப்பிட்டார்.
விழுந்த முஹமாட் சுல்ஹில்மி உடனடியாக எழுந்து ஏறத்தாழ 100 மீட்டர் தூரம் ஓடிச் சென்று அவ்வழியே வரும் மற்ற சாலைப் பயனரிடம் உதவி கேட்க முடிற்சித்துள்ளார். அந்த வழியாக வந்த ஒருவரின் உதவியுடன் சம்பவ இடத்தைக் கடந்து குவா மூசாங் மருத்துவமனையை அடைந்திருக்கிறார் முஹமாட் சுல்ஹில்மி.
அந்தப் புலி சாலையை கடந்த வந்ததா அல்லது தன்னைத் தாக்க வந்ததா எனத் தெரியவில்லை என்றும் கூறினார் எம் முஹமாட் சுல்ஹில்மி.
இதனிடையே, இந்த விபத்து குறித்து கிளாந்தான் மாநில வனவிலங்கு பாத்காப்பு, தேசியப் பூங்கா இலாகாவான பெர்ஹிலிதான்னுக்குத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் இயக்குநர் முஹமாட் ஹாஃபிட் ரொஹானி தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்குத் தமது தரப்பு சென்றதாகவும் விசாரணை மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.








