காஜாங், ஆகஸ்ட்.05-
ஓன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க நடப்புச் சட்டம் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சிறு, சிறு அளவில் போதைப்பொருள் விற்பனை ஓன்லைன் மூலம் நடைபெற்று வருவதை முழு வீச்சில் கட்டுப்படுத்தவும், தடை செய்யவும் நடப்பில் உள்ள சட்டத்தின் விதிமுறைகள் முழுமையாக ஆராயப்பட்டு வருவதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையிலான சிறப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருப்பதாக சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.
ஓன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் அணுகுமுறை இதற்கு முன்பு இல்லாததால் அதற்கான சட்ட விதிமுறைகள் பற்றிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.
நடப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமா? அல்லது பிரத்தியேகமாக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டுமா? என்பது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலனை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.








