கோலாலம்பூர், நவம்பர்.25-
ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான எம். இந்திராகாந்தியின் முன்னாள் கணவரையும், நீண்ட காலமாக காணாமல் போன அவரின் மகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியார் புலனாய்வுச் சேவை பெறப்பட்டுள்ளதாக கெராக்கான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ நரன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்ற முகமட் ரிதுவான் அப்துல்லா இன்னமும் மலேசியாவில்தான் பதுங்கியிருக்கிறார் என்பது தெரிய வந்ததைத் தொடர்நது தனியார் துப்பறிவாளர் சேவையை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஒரு வழக்கறிஞரான டத்தோ நரன் சிங் குறிப்பிட்டார்.
அவர்கள் இருக்கும் இடத்தைத் திட்டவட்டமாகக் கூற முடியாவிட்டாலும் அனுமானமாகச் சொல்ல முடியும், அதனை இப்போது வெளியிட முடியாது என்று நரன் சிங் குறிப்பிட்டார்.
இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா டிக்ஷாவை மீட்கும் அளவிற்கு தனியார் துப்பறிவாளர் சேவை இன்றியமையாததாகத் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.








