அலோர் ஸ்டார், ஜனவரி.19-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், முன்னாள் வங்கி நிர்வாகி ஒருவரை ட்ரோன் கொள்முதல் நிதிக்காக சுமார் 7 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது.
50 வயதுடைய அந்தச் சந்தேக நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை வாக்குமூலம் அளிக்க கெடா எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு வந்த போது மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
மாஜிஸ்திரேட் நூர் ஷிஃபா முஹமட் ஹம்ஸா, எஸ்பிஆர்எம் விண்ணப்பத்திற்குப் பிறகு, சந்தேக நபரை வரும் ஜனவரி 23 வரை ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த குற்றத்தைச் செய்ததாக நம்பப்படுகிறது. ட்ரோன் வாங்குவதற்கான நிதியைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்களுக்கு உதவுவதற்காக, தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ஆயிரம் முதல் 2,300 ரிங்கிட் வரை லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
கெடா எஸ்பிஆர்எம் இயக்குநர் டத்தோ நஸ்லி ரஷிட் சுலோங் இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டம், பிரிவு 16 – ரின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








