நிபோங் திபால், பிப்ரவரி.22-
செபெராங் பிறை செலாத்தான் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக மின்னணு கழிவுகளையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரித்து வந்த ஒரு வளாகத்தை பொது பாதுகாப்புப் படையும் பல்வேறு அரசுத் துறையிரும் இணைந்து கண்டறிந்துள்ளனர். இந்தச் சோதனையின் போது சுமார் 3.37 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கழிவுகள் கைப்பற்றப்பட்டதுடன், அந்த இடத்தின் உரிமையாளர் எனச் சந்தேகிக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்புப் படையின் Komander Briged Utara மூத்த உதவி ஆணையர் பல்வீர் சிங் மஹிண்டர் சிங் தெரிவித்தார்.
2025-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த ஆலை, சுற்றுச்சூழல் துறையின் முறையான அனுமதியின்றி கழிவுகளைச் சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் இத்தகைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று பல்வீர் சிங் கூறினார்.








