பேராக் மாநிலம், தெலுக் இந்தான், தாமான் பஞ்சார் ஜெயா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கடை ஒன்றின் முன்பாக ஆடவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் மூன்று சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஹிலீர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் சுவா கோக் லியான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் 4-ஆம் தேதி இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அன்றைய தினமே நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு வரும் நவம்பர் 11-ஆம் தேதி வரை தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுவா கோக் லியான் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








