தகுதி பெற்ற டாக்ஸி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு தீபாவளிக்கு முன்பாக ஒருமுறை வழங்கப்படும் 1,000 நிதியுதவியைப் பெறுவார்கள் என தரைமார்க்க பொது போக்குவரத்து வாகனங்கள் ஆணையமான அபாட் (APAD) தெரிவித்துள்ளது.
இந்த நிதியுதவி தகுதியுள்ள அனைவரையும் சிரமமின்றிச் சென்றடையும் வகையில், பல்வேறு வழிகளில் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அபாட் குறிப்பிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, தொடர்ந்து செயல்பாட்டில் இருந்த ஓட்டுநர் அட்டைகளின் பதிவுகளின் அடிப்படையில், மொத்தம் 15 ஆயிரத்து 62 டாக்ஸி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்கள் இந்த நிதியுதவியைப் பெறுவதற்குத் தகுதி பெற்றவர்களாக அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், அக்டோபர் 14-ஆம் தேதி முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை பேங்க் சிம்பானான் நேஷனல் ரொக்கப் பற்றுச்சீட்டுகள் மூலம் 2,619 ஓட்டுநர்கள் நிதியுதவியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்ராஜெயா, பினாங்கு, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் கெடா ஆகிய இடங்களில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டதாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அபாட் குறிப்பிட்டுள்ளது.








