மலேசியாவில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 81 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அவற்றில் சிடிஎல் (CDL) எனப்படும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய வெளிநாட்டவர்கள் தொடர்பாக 21 ஆயிரத்து 232 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், ஜிடிஎல் (GDL) எனப்படும் சரக்கு வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 1,933 வழக்குகளும், பிஎஸ்வி உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 85 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இதர விதிமீறல்களில் காலாவதியான மோட்டார் வாகன உரிமம், காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அனைத்துலக ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனம் இயக்குதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சுமை ஏற்றுதல் ஆகியவை அடங்கும் என அந்தோணி லோக் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.








