Nov 6, 2026
Thisaigal NewsYouTube

இனி வெளிநாட்டு மோசடிக் கும்பல்கள் மீதும் சட்ட நடவடிக்கை: இணைய குற்ற மசோதாவிற்கு புக்கிட் அமான் வரவேற்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இனி வெளிநாட்டு மோசடிக் கும்பல்கள் மீதும் சட்ட நடவடிக்கை: இணைய குற்ற மசோதாவிற்கு புக்கிட் அமான் வரவேற்பு

மலேசியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான இணையக் குற்ற மசோதாவை வலுப்படுத்தி வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அரச மலேசிய போலீஸ் படை வரவேற்பு தெரிவித்துள்ளது.

நாடெங்கிலும் உள்ள கணினி அமைப்புகளைப் பயன்படுத்தி குற்றங்கள் இழைக்கப்பட்டாலோ அல்லது மலேசியர்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் கொண்டிருந்தாலோ, வெளிநாடுகளில் செயல்படும் குற்றவாளிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்துள்ளார்.

மேலும், இணையக் குற்றங்களும், இணைய மோசடிகளும் தற்போது புவியியல் எல்லைகளைக் கடந்து நடப்பதாகக் குறிப்பிட்ட அவர், வெளிநாடுகளில் செயல்படும் மோசடிக் கும்பல்கள் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி மலேசியர்களைக் குறிவைப்பதாக எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் குற்றவாளிகள் மீது விசாரணை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தப் புதிய சட்டப் பிரிவுகள் தெளிவான சட்ட அடிப்படையை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இணையக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தரவுகளைப் பாதுகாத்தல் மற்றும் வெளியிடுதல், இணையப் போக்குவரத்துத் தரவுகளைச் சேகரித்தல், தகவல் தொடர்புகளைக் கண்காணித்தல் மற்றும் இடைமறித்தல் ஆகியவற்றுக்கான விசாரணை அதிகாரங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என ருஸ்டி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi, நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், 2026ஆம் ஆண்டுக்கான இணையக் குற்ற மசோதாவின் இரண்டாவது பிரிவு, வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீதும் அந்தக் குற்றங்கள் மலேசியாவில் நடைபெற்றதாகக் கருதி சட்ட நடவடிக்கை எடுக்க வழிவகை செய்வதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →