மலாக்காவில் நேற்றிரவு நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியர்களின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதித்து, அனைத்து இன மக்களும் பரஸ்பர மரியாதையுடன் வாழ்வதே மலேசியாவின் பலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், தீபாவளியை முன்னிட்டு எஸ்டிஆர், சாரா உதவித்தொகைகள் முன்கூட்டியே வழங்கப்பட்டதாகவும், இதற்காக 16 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய சமூகத்திற்கான மித்ரா நிதி 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அமானா இக்தியார் மற்றும் தெக்குன் திட்டங்கள் மூலம் தலா 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஏழை மற்றும் தேவையுள்ள இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், நாட்டின் நிதி வளங்களைப் பாதுகாப்பதன் மூலமே மக்களுக்கான நலத்திட்டங்களையும் மானியங்களையும் தொடர்ந்து வழங்க முடியும் எனக் குறிப்பிட்ட அன்வார், ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் மானியங்களுக்காக ஆண்டுக்கு 40 பில்லியன் ரிங்கிட் செலவிடப்படுவதாகத் தெரிவித்தார்.

அதேவேளையில், 1எம்டிபி, தாபுங் ஹாஜி, ஃபெல்டா உள்ளிட்ட முறைகேடு விவகாரங்களைச் சுட்டிக் காட்டிய அன்வார், சபா எரிவாயுக் குழாய் திட்டத்தில் ஏற்பட்ட சுமார் 7 பில்லியன் ரிங்கிட் இழப்பில், சீன அதிபர் ஸி ஜின் பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி 5 பில்லியன் ரிங்கிட்டை மீட்டதாகவும், அந்த நிதி பேராக் மற்றும் பினாங்கின் நீர் தேவையை உறுதிப்படுத்தும் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அன்வார் கூறினார்.
இந்நிலையில், மலாக்கா மாநிலமானது பக்காத்தான் ஹராப்பானின் கோட்டையாக இல்லாவிட்டாலும், இம்முறை மக்கள் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அன்வார், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.








