கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-
சபாவை மட்டுமன்றி நாட்டை உலுக்கியுள்ள 13 வயது மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பில், போலீஸ் விசாரணையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம், விசாரணையை முழு வீச்சில் மேற்கொள்வதற்கு ஒன்பது பேர் கொண்ட சிறப்புப் போலீஸ் குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவினர் சபாவிற்கு விரைகின்றனர்.
அந்த மாணவியின் உடல் மீதான சவப் பரிசோதனை நேற்று முடிவுற்ற நிலையில் அவரின் உடலில் பல காயங்கள் இருப்பதாக அவரின் குடும்ப வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும், விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதையும் உறுதிச் செய்ய ஒன்பது போலீஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை புக்கிட் அமான் அமைத்துள்ளதாக அரச மலேசிய போலீஸ் படை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சபா, பாபார், லிமாவான், துன் டத்து முஸ்தபா, சமய தேசிய இடைநிலைப்பள்ளியின் மாணவியான ஸாரா கைரினா மகாதீர், கடந்த ஜுலை 16 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தாம் தங்கியிருந்த பள்ளி ஹாஸ்டலின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
கடுமையான காயங்களுடன் கோத்தா கினபாலு, குயின் எலிஸபெத் 1 மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸாரா கைரினா மறுநாள் மரணமுற்றார். அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்த மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நேரடியாக ஏற்றுள்ளது.








