கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-
குத்தகைகளைத் தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்குவதில் கடந்த 11 ஆண்டு காலமாக லஞ்சமும், ஆடம்பரச் சொத்துகளையும் பெற்று வந்ததாக நம்பப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஓர் இயக்குநர் உட்பட மூவருக்கு எதிரான தடுப்புக் காவலை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நீடித்துள்ளது.
டிபிகேஎல்லின் முக்கிய அதிகாரியான 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர், எந்தவொரு பணமும் செலுத்தாமலேயே ஆடம்பர அடுக்குமாடி வீடுகளைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர் குத்தகை வழங்கியதாக நம்பப்படும் நிறுவனம் ஒன்றின் பெண் நிர்வாகி மற்றும் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகப் பெரிய லஞ்ச ஊழல் என்று வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவத்தில் இதுவரையில் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.








