சிலாங்கூரில் வசிக்கும் 68 ஆயிரத்து 452 குடும்பத் தலைவர்கள் ஈ காசி திட்டத்தில் பதிவு செய்துள்ளார்கள் என சிலாங்கூர் மாநில மனிதவளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ பாப்பாராய்டு தெரிவித்தார்.
அவர்களில் 4 ஆயிரத்து 939 குடும்பத் தலைவர்கள் வறிய நிலையில் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தகவலை பிரதமர் துறையின் கீழ் இயங்கும் செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு ஐசியு, மலேசியப் புள்ளிவிவரத் துறை ஆகியவற்றிடம் இருந்து பெற்றதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.
ஏழைக் குடும்பங்கள் அல்லது வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் எனப் பாகுபாடு பார்க்காமல், சிலாங்கூரில் வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் எப்போதும் தீவிரப்படுத்தப்படுகின்றன என்றார்.
அதன்படி, இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் வழி வறுமையை ஒழிப்பதில் ஒரு தொடர்ச்சியான முயற்சியாகவும் நீண்டகால உத்தியாகவும் கூட பார்க்கப்படுகிறது என்றார் பாப்பாராய்டு.
எனவே, அக்குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்து, பி 40 நிலையில் இருந்து எம் 40 நிலைக்கு அவர்களை உயர்த்த மாநில அரசு பல வழிகளை தற்போது கையாண்டு வருகிறது என்றும் பாப்பாராய்டு குறிப்பிட்டார்.








