Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.14-

பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவ மாணவன் ஒருவன், நான்காம் படிவ மாணவி ஒருவரைக் கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் தெரிவித்தார்.

பள்ளி வளாகத்தில் இன்று காலையில் 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தனது விசாரணையைத் தொடங்கிய போதிலும் இவ்விவகாரத்தை ஆராய அமைச்சு அளவில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் இரண்டு மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் மாணவியின் மரணம் தொடர்பில் நியாயமான மற்றும் வெளிப்படையிலான விசாரணை நடைபெறுவதை இந்த சிறப்புக் குழு மூலம் உறுதிச் செய்யப்படும் என்று ஃபட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.

அதே வேளையில் போலீசார் மேற்கொள்ளும் புலன் விசாரணைக்கும் கல்வி அமைச்சு எல்லா நிலைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கும் என்று ஃபட்லீனா சீடேக் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதி கூறினார்.

"இந்தச் சம்பவம் தற்போது போலீசாரின் விசாரணையில் உள்ளது. மேலும் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்பதையும் அவர் தெரிவித்தார்.

இதனிடைய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர், உடனடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக கல்வி தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் அஸாம் அஹ்மாட் அறிவித்துள்ளார்.

விசாரணை முடியும் வரையில் அப்பள்ளியின் முதல்வர், மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியாற்றுவார் என்று அவர் தெரிவித்தார்.

Related News