கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-
சாலை வரியைச் செலுத்தாமலும், காப்பீட்டைப் புதுப்பிக்காமலும் தொடர்ந்து அலட்சியம் செய்யும் சொகுசு வாகன உரிமையாளர்களைக் கண்டறிய, சாலைப் போக்குவரத்துத் துறை ஜேபிஜே, நாடு தழுவிய அளவில் ஓப்ஸ் லக்ஸரி என்ற பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது.
இதுநாள் வரை விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை மீறிச் செயல்படும் உரிமையாளர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். செல்லுபடியாகும் சாலை வரியும் காப்பீடும் இல்லாத சொகுசு வாகன உரிமையாளர்களையும் அவற்றின் இருப்பிடங்களையும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜேபிஜேவின் சட்ட அமலாக்க மூத்த இயக்குநர் முகமட் கிஃப்லி மா ஹசான் தெரிவித்தார். ஜேபிஜே எந்த சமரசமும் இன்றி பறிமுதல் நடவடிக்கை எடுக்கும் என்றும், விதிகளை மீறும் சொகுசு வாகனங்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாகச் செயல்படும் என்றும் எச்சரித்துள்ளார்.








