கோத்தா கினபாலு, செப்டம்பர்.26-
பெட்ரோல் ரோன் 95 எரிபொருள் லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விற்பனை செய்யப்படும் திட்டம், நாளை செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படவிருப்பதைத் தொடர்ந்து அவ்வகை பெட்ரோலை வாங்குவதற்கு முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படும் மைகாட் அட்டையை மாற்றிக் கொள்வதில் மக்கள் காட்டி வரும், ஆர்வம் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு, மைகாட்டில் சேதமுற்ற மென்பொருளைக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை மக்கள் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் அறிவித்தது முதல் சபாவில் 800 மைகாட் அட்டைகள் மாற்றப்பட்டு விட்டன என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
பொதுவாகவே நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் மைகாட் அட்டைகள் மாற்றப்படுகின்றன. மாதத்திற்கு சராசரி 30 ஆயிரம் மைகாட் அட்டைகள் மாற்றப்படும். ஆனால், சபாவில் ஓரிரு நாட்களில் 800 மைகாட் அட்டைகள் மாற்றப்பட்டுள்ளன என்றால் மக்களிடையே மகத்தான வரவேற்பு கிட்டியுள்ளது என்று சைஃபுடின் தெரிவித்தார்.








