முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் தொடர்புடைய 1.25 பில்லியன் ரிங்கிட் சூரிய மின்சக்தி திட்ட வழக்கில், முக்கிய அரசு தரப்பு சாட்சியான ராயன் ராட்ஸ்வில் அப்துல்லாவிடம் கூடுதல் சாட்சியம் பதிவு செய்ய வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி விசாரணை நடத்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க ரோஸ்மாவிற்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே, புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொண்டதற்கு எதிராக அரசு தரப்பு, கூட்டரசுப் பிரதேச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்து, உயர்நீதிமன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரி மனுவும் தாக்கல் செய்துள்ளது.
எனினும், அப்பீல் நீதிமன்றம் வழங்கிய இரண்டு வார காலக்கெடுவை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்லாம் ஸைனுடின், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விசாரணையை நடத்த உத்தரவிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ரோஸ்மா மீது சுமத்தப்பட்ட மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








